Chapter 43
மணியின் வாழ்வில் மது திரும்பவும் நுழைவதற்கு, இரு நாட்களுக்கு முன்.
பெரும் குழப்பத்திலும், தவிப்பிலும், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வந்திறங்கினாள் மது. எங்கு சென்று தங்குவது? மொத்தமாக துண்டித்துவிட்டு சென்ற நட்பை சந்திக்கலாம்? என்ற குழப்பம். முழு மனதுடன் மணியை மன்னிக்க முடியாவிட்டாலும், அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வில், வாழ்வின் கசப்பான நாட்களை கடந்து செல்ல, அவள் முடிவு செய்திருந்தாலும், மணியின் மனநிலை என்னவாக இருக்கும்?, அவனும் தன்னைப் போலவே இன்னும் தவித்துக் கொண்டுதான் இருப்பானா? இல்லை தன்னை வெறுத்து இருப்பானா? அப்படி, அவன் தன்னை வெறுத்து, கோபப்பட்டால், என்ன செய்வது? என்ற தவிப்பு.
டாக்ஸியில் ஏறியவள், அடுத்த ஒரு மணி நேரத்தில் ரெசிடென்சி ஹோட்டலில், ஒரு அறையில் இருந்தாள். தவிப்புடன், எழுந்து சென்று அறையின் கதவைத் திறந்தவள் கண்ணில்பட்டது அறை எண் 303. முதலில் அந்த அறையை பெறத்தான் முயற்சி செய்தாள், ஆனால் அது ஏற்கனவே வாடிக்கையாளர் ஒருவரால் எடுக்கப்பட்டிருந்தது. ஏக்கமாக, அந்த அறைக்கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள், மது. பின், மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள், கிளம்பி மணியின் அலுவலகத்திற்கு சென்றாள். தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊர், அன்னயோன்யமான நகரம், இன்று அந்நியமாக தெரிந்தது, அந்த ஊரைத் தாண்டி, வேறு ஒரு உலகை, நான்கு வருடங்களுக்கு முன்வரை யோசித்து இருக்கவில்லை, அவள். பிரம்மாண்டமான, கோயம்புத்தூரில் அடையாளம் என்று மாறிப் போயிருந்த, அந்த கட்டிடத்தை பிரமிப்புடன் பார்த்தாள், மது. நெஞ்சம் படக்க, அந்த கட்டிடத்தினுள் நுழைந்தவளுக்கு, மணி மும்பை சென்று இருப்பதாக செய்தி சொல்லப்பட, ஐந்து நிமிடம் கழித்து, வெளியேறினாள். மீண்டும் அந்த கட்டிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நெடுநேரம்.
*************
அந்த வீடியோ பார்த்ததிலிருந்து, மணியின் நினைவுகள் நிரந்தரமான கசப்பை, அவளுக்கு கொடுத்திருந்தது. அந்தச் சிறுவனும், அவனது தாயும், காயமுற்ற மணி, முதல் முறையாக டென்னிஸ் விளையாடிவிட்டு வந்து, மதுவை கட்டிக்கொண்டு அழுததை ஞாபகப் படுத்தியது. அந்த நிகழ்வு, மதுவை பொறுத்தவரை, மணியன் வாழ்வில், அவள்தான் அச்சாணி என்று நங்கூரம் இட்டு சொன்ன நிகழ்வு. வாலிப மணியின் நினைவுகளை வெறுத்தவளால், சிறுவனாக, பரிதவிப்புடன் தன்னை ஒட்டிக்கொண்டு திரிந்த மணியின் நினைவுகளை வெறுக்க முடியவில்லை. நான்கு வருட கசப்பையும் மீறி, முதன்முதலாக அவனது நினைவுகள் தித்திப்பாய் தோன்றிய காலங்களின் நினைவுகள், அவள் மனதினுள் புது சுவையைத் தூவிச் சென்றது. அந்த நினைவுகளை உதறித்தள்ள அவள் எவ்வளவோ முயன்றும், முடியாமல் போகவே, இயலாமையில் மீண்டும், அழ ஆரம்பித்தாள்.
மனதினுள், "ஏண்டி இப்படி பண்ண?" இன்று தன்னையும், "நீ ஏண்டா இப்படி பண்ண?" என்று அவனையும் மாறி, மாறி கேள்வி கேட்டுக் கொண்டு, அவனை நாடிச்செல்லும் மனமில்லாமலும், அவனை, அவனது நினைவுகளை, அதுவரை தள்ளி வைக்க உதவிய, அவன் மீதான வெறுப்பு காணாமல் போக தன்னைத்தானே வருத்திக் கொண்டாள், மது. குழம்பிய குட்டையாக தவித்துக் கொண்டிருந்தவளை, பெண் பார்த்தாகிவிட்டது, இன்னும் நான்கு வாரங்களில் தனக்கு கல்யாணம் என்று சொன்ன ரஞ்சித், மேலும் குழப்பிவிட்டு சென்றான். நிச்சயதார்த்தத்தில், கடந்தகால காதலின் எந்த வலியும், சலனமும், இல்லாமல் சிரித்த முகமாக இருந்த ரஞ்சித்தைப் பார்த்ததும், அவன் மேல் வெறுப்புதான் வந்தது மதுவுக்கு. ஒருத்தரை வாழ்வென நினைத்தபின், எப்படி, அதே இடத்தில், இன்னொருவரை வைத்துப் பார்க்க முடிகிறது இவர்களால்? என்ற கேள்விதான், அந்த வெறுப்பிற்கு காரணம். பொறுக்க மாட்டாமல், மறுநாள் காலை, ரஞ்சித்டமே கேட்டுவிட்டாள், சிரித்தவன்,
"ஸீ!!, அன்னைக்கு உனக்கு அட்வைஸ் பண்ணேன் இல்ல!! உங்க அம்மாவ மன்னிக்கச் சொல்லி, ரொம்ப எதார்த்தமா சொன்ன வார்த்தை அது!!. நீயும் திருப்பி யதார்த்தமா கேட்ட, என்னால வெண்ணிலாவை மன்னிக்க முடியுமானு?!! யோசிச்சு பாத்தேன், அவளை, மன்னிக்க வேண்டிய அவசியமே இல்லனு தோணுச்சு!!. அவள் எனக்கு கிடைக்கலங்கிற, ஒரே காரணத்துக்காக, எதுக்கு என்னையும் கஷ்டப்படுத்தி, என்னோட ஃபேமிலியையும் கஷ்டப்படுத்தனும்னு தோணுச்சு!! அதுவுமில்லாம, அதுவரை, மொத்த பழியையும் அவ மேல போட்டு, என்னை நல்லவன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்!! அது தப்புன்னு, அப்படி இல்லனு தோணுது!! நீ முடியாதுனு சொன்னதுக்காப்புறமும் மூணுதடவ ப்ரபோஸ் பன்னிருக்கேன்!! உனக்கு, முதல் தடவ ப்ரபோஸ் பண்ணினப்பவே, அவளை தாண்டி என் வாழ்க்கையை யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்!! நீ முடியாதுனு சொன்னதால, உனக்கு ப்ரபோஸ் பண்ணுணதுக்கு கூட அவள் சந்தோஷமா இருக்கத்தானு, என்ன நானே ஏமாத்திக்கீட்டு இருந்திருக்கேன்!! அது எப்போ புரிஞ்து!!. That's all!!. என் தப்ப, எப்போ, நான், உணர்ந்தேனோ அப்பவே, கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டேன்!!" மிகவும் இலகுவாக சிரித்தான்.
ரஞ்சித் சொன்னதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், அவள் மனதை, முழுதாக நிரப்பிக்கொண்டான், மணி. அடுத்த இரண்டுநாள் கழித்து, விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள், கோயம்புத்தூருக்கு.
*************
அன்று மாலை,
"நீங்க பேசிக்கிட்டு இருங்க!!, நான் இப்ப வந்துடறேன்!!" வெளியேறிய பிரதீப்ற்கு, பதில் சொல்லவில்லை நேத்ராவும், மதுவும்.
"சாரி!! நேத்ரா!!" எத்தனைமுறை சாரி கேட்டிருப்பாள் என்பதை மதுவும் எண்ணவில்லை, நேத்ராவும் கண்டுகொள்ளவில்லை.
மணியை பார்க்க இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றதும், மதுவின் நினைவில் வந்தது நேத்ராதான். வருகிறேன், வருகிறேன், என்று நம்பவைத்து, கடைசியில் தன் திருமணத்திற்கு வரவில்லை என்ற கோபம் நேத்ராவிற்கு. கோயம்புத்தூர் வருவதற்கான மனவலிமை, அந்த நேரத்தில் மதுவிடம் சுத்தமாக இல்லை.
"எப்படி இருக்க?" நீண்டநேரம் நிலவிய அமைதியை உடைத்தாள், மது.
"ம்ம்!!" கொட்டினாளே ஒழிய, வேறேதுவும் பேசவில்லை, நேத்ரா. மீண்டும் அந்த அறையில் அமைதி.
"பிரதீப், உன்ன நல்லா பாத்துக்கிறானா?" என்ன பேசுவதென்று தெரியாமல், அதே நேரம் அமைதியாக இருக்கப் பிடிக்காமல், நலம் விசாரிப்பது போல் பேச்சை வளர்க்க முயற்சித்தாள், மது.
"அவன் என்ன, என்னை நல்லா பாதிக்கிறது!!, அவன, நான் நல்லா பாத்துக்குறேன்!!" சிரித்தவாறு சொன்ன நேத்ரா, எழுந்து வந்து, மதுவின் அருகே அமர்ந்தாள்.
பிரதீப்பை பற்றி பேச்சை எடுத்ததும் இலகுவான மித்ராவின் பதிலில் இருந்து, அவர்களது திருமண வாழ்வை புரிந்து கொண்டாள், மது. ஏனோ, தோழியின் மகிழ்ச்சியான வாழ்வு அவளுக்கு மகிழ்ச்சியைக் காட்டிலும், அதிகமாக ஏக்கத்தைக் கொடுத்தது. அந்த ஏக்கமே, மது எதற்காக கோயம்புத்தூர் வந்திருக்கிறாள் என்பதை நேத்ராவிடம் சொல்ல வைத்துவிட்டது. முதலில், நம்பமாட்டாத அதிர்ச்சியுடன் மதுவைப் பார்த்தவள், கடுமையான ஆட்சேபத்தை மதுவிடம் தெரிவித்தாள். பின், ஒருவராக நேத்ராவிடம் பேசியே, அவளது மனதை மாற்றினால் மது. ஆனால் நேத்ரா கேட்ட ஒரு கேள்வி, மதுவின் மனதை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது.
"இன்னும், அவன் உன்னையே தான் நினைச்சிட்டு இருப்பான் என்பது என்ன நிச்சயம்? அவன் வாழ்க்கைல, இன்னொரு பொண்ணு இருந்தா? என்ன பண்ணுவ?!!" என்ற கேள்விதான் அது.
தன் தோழியை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல், அவள் மேலும் காயப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், கேட்கப்பட்ட கேள்வி. அந்தக் கேள்வி மதுவை, வாய்விட்டு அழ செய்தது.
"அப்படி எல்லாம், அவன் போகமாட்டான்!!" அழுகையின் ஊடே, அவளுக்கு, அவளே, ஆருடம் சொல்லி கொண்டாள்.
"அப்படி இருந்தா எனக்கு சந்தோஷம்தான் பானு!!" என்ற நேத்ரா, அதன்பின் அதைப் பற்றி பேசவில்லை.
*************
நிகழ்காலம்.
ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகம் நோக்கி, அந்த கார் சென்று கொண்டிருந்தது. பெரும் படபடப்புடன் இருந்தாள் மது. தன்னைப் பார்த்தால், கோபப்படுவானா? கண்ணீர் விடுவானா? பார்க்க கூட விரும்பமாட்டானோ? வெறுத்து ஒதுக்கி விட்டால்? எண்ணற்ற கேள்விகள், அவள் மனதை குடைந்துகொண்டு இருந்தது.
"என்னாச்சு?" காரை ஓட்டிக்கொண்டிருந்த நேத்ரா, தன் தோழியின் பரிதவிப்பைப் பார்த்து கேட்க,
".…..…." ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள்.
"இங்க பாரு, இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போகல!!, நான், மட்டும் போய் பார்த்து பேசிட்டு வரேன்!!" இன்று காலையிலிருந்து சொல்லிக்கொண்டிருந்த யோசனையை, மீண்டும் சொன்னாள், நேத்ரா.
உறுதியாக, மறுத்து விட்டாள், மது. எவ்வளவு கோபம் இருந்தாலும், வெறுப்பு இருந்தாலும், தன் முகம் பார்த்து, மணியால், தன்னை நிராகரிக்க இயலாது என்ற நம்பிக்கை கொடுத்த உறுதி, அது. அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தவர்கள், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்த, அவனது அலுவலகத்தில் நுழைந்தனர். அப்பாயின்மென்ட் இல்லாமல், அனுமதிக்க முடியாது என்று மணியன் தனிஅலுவலக வரவேற்பாளர் சொல்ல, தங்கள் அந்த அறையிலேயே காத்திருப்பதாகவும், மணி, வெளியே வரும்போது சந்தித்து கொள்வதாக சொல்லி, அந்த வரவேற்பறையில் இருந்த சோபாவில், அமர்ந்து விட்டனர் இருவரும்.
அமர்ந்த ஐந்து நிமிடங்களுக்குள், அறைக்கதவை திறந்துகொண்டு, வெளியே வந்தான், மணி. வெளியே வந்தவனின் கண்களில் முதலில் பட்டது, மதுதான். இருவரது கண்களும் சந்தித்துக்கொண்டன. அடுத்த நொடியே, மணியின் கண்கள், மதுவிடம் இருந்து விலகி அருகில், இருந்த நேத்ராவை நோக்கியது.
"ஹாய்!!" என்றான் மணி.
அவன் மட்டும் அதிர்ச்சி அடைந்திருந்தாலோ, திரும்ப அறைக்குள் நுழைந்திருந்தாலோ, ஓடிச்சென்று கட்டிப்பிடித்திருப்பாள் மது. ஆனால் அவனோ, வெகு இயல்பாக இருந்தான். அந்த "ஹாய்"யும், மணியின் முகபாவனையும், மதுவின் மனதில், அதுவரை இருந்த நம்பிக்கை அனைத்தையும் தவிடு பொடி ஆகியது. அவனின் ஹாய், தினமும் சந்தித்துக் கொள்ளும் நண்பர்களேப் பார்த்து கூறும் மிக இயல்பான ஹாய். முகத்தில், இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத அந்த சிரிப்பு.
"கால் பண்ணிட்டு வந்திருக்கலாமே!!" இருவரையும் நோக்கி பொதுவாகச் சொன்னான்.
"இல்ல, சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தோம்!!" இல்லாத தெம்பை எல்லாம், இழுத்து வைத்துக்கொண்டு, மதுதான் பேசினாள்.
"ஓ" போட்டவன்,
"கம்!!" என்றவாறு, அவன் அலுவலக அறையை திறந்தான்.
"வெளிய. காபி ஷாப் எங்கையாவது போகலாமா?" படபடப்புடன் சொன்னாள், மது.
"கம்!!" என்றான் மீண்டும்.
மது சொன்னதை காதில் வாங்கினானா? இல்லையா? என்பது, அவனுக்கு மட்டும்தான் வெளிச்சம்.
வேறு வழியில்லாமல் அவனை கதவை நோக்கி இரண்டடி, எடுத்துவைத்த பின்தான், நேத்ரா இன்னும் சோபாவில் இருந்து எழவில்லை என்பதை கவனித்தாள். நேத்ராவின் அருகில் சென்ற, மது, அவள் தோளை தொட்டதும், ஏதோ மயக்கத்தில் இருந்து விழித்தவள் போல, மலங்க மலங்க விழித்தாள், நேத்ரா. மதுவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டது போல், மணியின் அறைக்குள் நுழைந்தனர், இருவரும். அருகில் இருந்த இன்னொரு கதவைத் திறந்தவன், இருவரையும் பார்த்து உள்ளே வருமாறு, கண்ணசைத்தான். உள்ளே வந்த இருவரையும், சோபாவில் அமர சொன்னவன், அங்கிருந்த கிச்சன் போன்ற அமைப்பை நோக்கி சென்றான்.
"என்ன சாப்பிடுறீங்க?, டீ? or காபி?" என்றவன், அங்கிருந்த பிரிட்ஜை திறந்தான்.
"காபி!!" என்ற மது, மீண்டும் அருகிலிருந்த நேத்தராவைப் பார்த்தாள். இன்னும் அவள், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.
"என்னாச்சு?" நேத்ராவின் தோளைத் தொட்ட மது கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையசைத்தாள் நேத்ரா, மீண்டும் மணியைப் பார்த்தாள்.
கடந்த முறை அவனை பார்த்த பொழுது, குற்றவுணர்ச்சியில், கூனிக்குறுகி இருந்தவன், தற்பொழுது மொத்தமாக மாறியிருந்த வெறித்துக் கொண்டிருந்தாள், நேத்ரா. மதுவோ, குழந்தைத்தனம் முகத்தில் நிறைந்து இருக்க, தன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம், அவன் கண்களில் தோன்றும் ஒளி இல்லாத பார்வை, அவளை ஏதோ செய்தது. மொத்தமாக மாறிப் போய் இருந்தான், அவன். முகத்தில் அளவு எடுத்து வெட்டப்பட்ட தாடி, தான் லயித்துக் கிடந்த, உயிரை உறிஞ்சும் அதே பார்வை, ஆனால், அதில் முன்பு அவள் பார்த்த ஒளி சுத்தமாக இல்லை. அவனது இயல்பான நடவடிக்கையில், பெரும்பயம் அப்பிக் கொண்டது அவளது, மனதில். தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள், மது.
"எடுத்துக்கோங்க!!" மீண்டும் பொதுவாகச் சொன்னவன், எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அவரவருக்கான கோப்பையை எடுத்து குடிக்க ஆரம்பித்தவர்கள், எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பெண்கள் இருவரின் பார்வையும், அவன் மீதே நிலைத்திருக்க, அவன் இருவரையும் தாண்டி, அவர்கள் பின்னால் இருந்த சுவரில், தன் பார்வையை பதித்திருந்தான். அடிக்கடி, அவனது பார்வை மதுவை தீண்டிச்சென்றாலும், அது, அரை நொடிக்கு மேல், அவள் மீது நிலைக்கவில்லை.
"நீ, பால் இல்லாம, எதுவுமே குடிக்க மாட்டியே? என்ன பிளாக் டீ?" சுதாரித்துக்கொண்ட நேத்ராதான், அந்த அறையில் நிலவிவந்த அமைதியை, உடைத்தாள்.
"." பதில் சொல்லாதவன் உதடுகள், லேசாக விரிந்தது.
"எப்படி இருக்க?" ஏங்கும் பார்வையுடன் கேட்டாள், மது.
"உனக்கு எப்படி தோணுது?" நேத்ராவைப் பார்த்து கேட்டான், மணி.
"அடையாளமே தெரியாம மாறிட்ட, பெரிய ஆளாயிட்டனு, பிரதீப் அடிக்கடி, சொல்லுவான், உண்மைதான்!!" மணியன் கேள்வியும் பார்வையும், எனோ, நேத்ராவை பதில் சொல்ல வைத்தது.
"நல்லா இருக்கேன்!!, நீ எப்படி இருக்க?" மதுவைப் பார்த்துக் கேட்டான், மணி.
".." நல்லா இருக்கிறேன், என்பதைப் போல தலையசைத்தாள், மது.
"நீ என்ன பாக்க வந்ததுல, ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்றேன்!! நிஜமா!!" என்றவனின் முகத்தில், சந்தோஷத்திற்கான எந்த கூறும், இல்லை.
"." மீண்டும் ஒரு வறண்ட சிரிப்பை, மணியைப் பார்த்து உதிர்த்தாள், மது. மீண்டும் அமைதி நிலவியது அந்த அறையில்.
"ஏதாவது உதவி வேணுமா?" மணியின் கேள்விகள் துடித்துப் போனாள் மது. காதலை வேண்டி வந்தவளுக்கு, உதவி வேண்டுமா? என்று கேட்ட மணியை, அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவனது பார்வை நேத்ராவின் மீது இருந்தது. "இல்லை" என்று தலையசைத்தவள், கலங்கிய கண்களை, முகத்தைத் திரும்பி துடைத்துக் கொண்டு
"சாரி, சொல்லலாம்னு வந்தேன்!!" தயங்கித் தயங்கி சொன்னாள், மது.
மீண்டும் அந்த அறையில் ஒரு நீண்ட அமைதி. அவன் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தது, அவனின் முகத்தில், கண்களில், கண நொடி தோன்றிய அதிரிச்சி, மதுவிடம் நம்பிக்கையை விதைத்தது. அதுவரை மொத்த பழியையும், மணியின் மேல் சுமத்திக் கொண்டிருந்தவள், அவன் பிடி கொடுக்காது பேசவே, மொத்தப் பழியையும் தானே ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்தாள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது, அவனிடமிருந்து குறைந்தபட்சம் "பரவாயில்லை" என்ற வார்த்தையை எதிர்பார்த்த மதுவிற்கு, ஏமாற்றமே மிஞ்சியது. அவன் முகத்தையும், பார்வையும், ஆராய்ந்தவளால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்த நம்பிக்கையையும் இழந்தவள் எண்ணத்தில், ஏனோ "we are just not meant to be!!" என்று அவள், அவனிடம் சொன்னது வந்து போனது.
"இன்னும் மூணு நாள்ல, எனக்கு கல்யாணம்!! மனசுல, ஒரு சின்ன உறுத்தல், உன்ன பாக்கனும்னு தோணுச்சு!! அதான் வந்தேன்!!
தனக்குத் திருமணம் என்ற செய்தியை கேட்டால், கண்டிப்பாக உணர்ச்சி வசப்படுவான் என்ற எண்ணத்தை, கடைசி நம்பிக்கையாக பற்றிக்கொண்டாள். அய்யோ பாவம், அதிலும் அவளுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. முகத்திலும், கண்களிலும், எந்த உணர்ச்சியும் காட்டாமல், லேசாக, உதடுவிரித்து சிரித்தான், மணி. மதுவுக்கு, அழவேண்டும் போல் இருந்தது, அவன் முன்னால் அழவும் விருப்பமில்லை. விரக்தியாக சிரித்தவள், எழுந்து நின்றாள். நேத்துராவிடம் கிளம்பலாம் என்று சொல்ல, என்ன நடக்கிறது என்று புரியாத நேத்ராவும் எழுந்தாள். இருவரும், அந்த அறையின் கதவை நோக்கி நடக்க, மணியும் எழுந்து அவர்கள் பின்னால், வந்தான். அறையின் கதவைத் திறந்த மது, மணியிடம் திரும்பி,
"நீ யாரையாவது லவ் பண்றியா?"
மணியிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்போம் என்று நினைத்துக்கூட பார்த்திருக்காத கேள்வியை கேட்டாள், மது. ஆமோதிப்பாக தலையசைத்தான், மணி. கண்டிப்பாக, காயப்பட்டுவிடுவோம் என்று உணர்ந்தவள், போதும், சென்று விடலாம், என்று நினைத்து அங்கிருந்து திரும்பியவளால் அவனது நிராகரிப்பை ஏற்றிக்கொள்ள முடியவில்லை.
"அவ பேரு என்ன?" அவன் ஆம் என்று தலை அசைத்ததை நம்பாமல், அவன் தலையசைத்த, அடுத்த நொடி கேட்டாள், மது.
"மாயா!!" மது கேள்வியை முடிக்கும் முன்னமே, பதிலளித்தான் மணி.
அவன் பதிலளித்த விதமே சொன்னது, "மாயா" என்ற பெயரை சொல்வதற்காகத்தான், தன்னை, அவன் அறைக்குள் அழைத்தான் என்று. பரிதவிப்புடன் வந்தவளின் மனதில் மொத்தமும் வெறுமை. அதே வெருமையுடன் மணியைப் பார்த்து சிரித்தாள், மணியும் அவளைப் பார்த்து சிரித்தான். இந்த முறை அவன் சிரிப்பின் அகலம் கூடியிருந்தது. மதுவின் மனதில் இருந்த மொத்த கேள்விகளுக்குமான பதில், அந்த சிரிப்பில் இருந்தது.
***********
இரண்டு நாள் கழித்து,
பஞ்சாபின், ஜலந்தர் நகரில் இருந்தாள், மது. மறுநாள், ரஞ்சித்தின் திருமணம். அதற்கான வேலைகளில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வின், எந்த ஒரு தாக்கமும் இல்லை, அவளிடத்தில். மணியைப் பிரிந்து வாழ்ந்த, நான்கு வருடகாலத்தில், எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருந்தாளோ? இல்லை, தான், அவனை மறுதலித்ததைப் போல, அவன் தன்னை மறுதலித்ததில், உள்ள நியாயத்தை உணர்ந்து, புரிந்து கொண்டாளோ? இல்லை நேத்ராவின் கேள்வியில், அவன் மும்பையில் இருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்த இரண்டு நாட்களில், இப்படித்தான் நடக்கும் என்று, ஒருவாராக தன்னைத் தயார் படுத்திக் கொண்டாளோ? இல்லை மணியின் வாழ்வில், இன்னொரு பெண் இருக்கிறாள் என்று அறிந்து கொண்ட நிம்மதியா? என்பதை, அவள் மட்டுமேதான் அறிவாள். மணியிடம், மூன்று நாட்களில் எனக்கு திருமணம் என்று அவள் சொன்னது கூட, ரஞ்சித்தின் திருமணத்தை நினைவினில் வைத்துத்தான். திரும்பவும் பேசிப்பார்க்கலாம், என்று நேத்ரா எவ்வளவோ முறை கூறியும், மறுத்தவள், அன்று இரவே அங்கிருந்து கிளம்பிவிட்டாள். இப்பொழுது இங்கே ரஞ்சித்தின் தீர்மான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மறுநாள் அணிந்து கொள்ள அவளுக்கு என, ரஞ்சித் எடுத்த உடையாய் வாங்க அவனைத் தேடிச்சென்றாள். ரஞ்சித்தை அறையில் நுழைந்தவள், அவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டதும், ஏதோ தவறு நடக்கப் போவதாக மனதில் உறுத்தியது. தரையில் அமர்ந்திருந்தவன், சாய்ந்து அமர்ந்திருந்த சோபாவில் தலையை சரித்து, விட்டத்தை வெறித்தபடி இருந்தான். வேகமாக அறையில் நுழைந்த மதுவின் நடையின் வேகம் குறைந்தது. மது வந்த சத்தம் உணர்ந்தவன், சட்டென எழுந்து சோபாவில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்து சிரித்தான். சிரிப்பில் இருந்த வலியில், அவன் நிலைக்கான காரணம், வெண்ணிலாதான் என்று விளங்கியது மதுவுக்கு. எதுவும் பேசாமல் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
"வெண்ணிலாவை பார்க்கிறியா மதி!!" மதுவின் முகம் பார்த்த ரஞ்சித் கேட்டான். வெண்ணிலாவை திருமணத்திற்கு அழைத்து இருக்கிறானா? என்று திகைத்தவள், சரி என்பது போல் தலையசைத்தாள்.
"அங்க பாரு!!" என்று ரஞ்சித் கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்த்தவள் அதிர்ச்சியானாள்.
ரஞ்சித், எழுந்து சென்று அந்த அறையில் இருந்த பாத்ரூமுக்குள், தன்னை வைத்து அடைத்துக் கொண்டான். மதுவோ, ரஞ்சித் கைகாட்டிய திசையில் இருந்த கண்ணாடியில் தெரிந்த, தன் பிம்பத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது. அவன் சொன்ன வெண்ணிலாவின் கதை, தன் கதைதான் என்பது அவளுக்கு தெளிவாக விளங்கியது. அவனிடம் பகிர்ந்து கொண்ட கதையில், அவன் கற்பனையால், கண், காது, மூக்கு வைத்து, தனக்கே திருப்பிச் சொல்லி, தன்னை தேற்றி இருக்கிறான் என்பது, தெளிவாக புரிந்தது மதுவிற்கு. அதுவரை புதிராக தெரிந்த ரஞ்சித்தை, மொத்தமாக புரிந்து கொண்டாள் மது. கலங்க ஆரம்பித்த அவளது கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள், மது.
"சாரி மதி, கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்!!" என்றவன், விரக்தியாக சிரித்தான்.
பரிதாபத்துடன் அவனைப் பார்த்தாள் மது. எழுந்தவள், அந்த அறையில் இருந்து வெளியேற முற்பட்ட
"ஒரே!! ஒரு நிமிஷம்!! மதி!!" என்ற ரஞ்சித், எழுந்து, அவள் அருகே வந்தான்.
"ஐ லவ் யூ!!" என்ற ரஞ்சித்தை பார்த்து, மறுப்பாக தலையசைத்த மதுவின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.
"உன்கிட்ட கடைசி வரைக்கும் சொல்லக்கூடாது தான் நினைத்திருந்தேன்!! பட், முடியல!! என்னோட லவ, உங்களது மாதிரி புனிதமான லவ்வானு தெரியல!!" குரல் உடைவதுபோல் இருக்க, பேச்சை நிறுத்தினான்.
"என்னால இந்த கல்யாணம் பன்னிக்க முடியாது!! ஓடிப்போயிடலாம்னு தான் நினைச்சுட்டு இருக்கேன்!! தயவுசெய்து, உனக்காக ஒரு தடவை யோசி!! முடிஞ்சா, எனக்காகவும்!!. நீ சரின்னு சொன்னா, இதே முகூர்த்தத்தில், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!! ப்ராப்ளம் வரும்னு நீ கவலை படாதே, எல்லாத்தையும் நான் சமாளிச்சுக்கறேன்!! எங்க அண்ணே எனக்காக எதையும் செய்வான்!!" நிறுத்தி நிதானமாக தெளிவாக பேசிய ரஞ்சித், அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
நெடுநேரம் அமைதியாக இருந்த மது, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், ஒரு முடிவுக்கு வந்தாள். நேத்ராவுக்கு அழைத்தாள்.
************
மது, நேத்ராவுக்கு அழைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில்.
தன்னை தடுக்க முயன்றவனை மீறி, அந்த அறையைத் திறந்தாள், நேத்ரா. அறை திறக்கப்படும் சத்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்தான், மணி.
"சாரி சார்!!, நான் சொல்ல சொல்ல கேட்காம, உள்ள வந்துட்டாங்க!!" மணியின் அலுவலக வரவேற்பாளர், மணியை பார்த்து பதட்டத்துடன் சொன்னார்.
"பரவால்ல, என்னோட பிரண்டு தான்!!" என்றவன், நேத்ராவைப் பார்த்து, எதிரில் இருந்த இருக்கையை, கை காட்டினான். அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்ததும்
"மதுவுக்கு நாளைக்கு கல்யாணம்!!" படபடத்தாள், நேத்ரா.
"ஞாபகம் இருக்கு!!" தலையசைத்தான். அவனது எதிர்வினையில், சற்று ஆடித்தான் போனாள், நேத்ரா.
"இன்னும் அவ, உன்ன தான் லவ் பண்ற!!" பட்டெனப் போட்டுடைத்தாள், நேத்ரா. நேத்ராவின் கூற்றில் சற்று ஆடித்தான் போனான், மணி. அவனது அதிர்ச்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, நேத்ரா.
"அன்னைக்கு வந்தது கூட அத சொல்லத்தான்!!, நீ அத சொல்றதுக்கு கூட அவளுக்கு வாய்ப்பு கொடுக்கல!!. இப்பகூட, அவ பிரெண்ட் ரஞ்சித் கல்யாணத்துக்கு தான் போயிருந்தாள்!!. அவன், சரியான சமயம் பார்த்து, அவ மனச குழப்பி, ஏதோ பண்ணி, அவள கல்யாணத்துக்கு சம்மதிக்க வாச்சிசுட்டான்!!" மித்ரா ரஞ்சித் என்றதும், மணியன் மூளை சுறுசுறுப்படையும் தொகு.
"நீ மட்டும், என்கூட வா!!, எதுவுமே பேச வேண்டாம்!!, உன்ன கண்ணில் பார்த்தா, உன் கூட ஓடி வந்துவிடுவா!!" நம்பிக்கையுடன் பேசிய நேத்ராவை பார்த்து, தன் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான், மணி. அந்த சிரிப்பெ நெதராவுக்கான பதிலை சொல்லியது. தலையைத் தொங்கப் போட்டவள், நம்ப முடியாமல் தலையை வலதும் இடதுமாக அசைத்தவாறு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எழுந்தாள்.
"அந்த மாயாவ, நான் பார்க்கணும்!!" ஏதோ நினைத்தவளாய் சொன்னாள், நேத்ரா.
அதே நேரத்தில், அந்த அறையில் இருந்த இன்னொரு கதவு, திறக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். வெளிவந்த பெண் நேத்ராவை ஒரு நொடி பார்த்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்த நேத்ராவின் மனதில் ஆத்திரம்
"ச்சீ!! உன் முகத்துல முளிக்கிறதே பாவம் டா!!" என்று கத்தியவள், அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
"என்னாச்சு!!" என்று கேட்ட அந்தப் பெண், மணியின் அருகே வந்தாள்,
"நந்திங்!!" என்றவன், அவளை பார்த்து சிரித்தான்.
***************
மறுநாள்,
மொபைலில் தொடு திரையை வெறித்துக் கொண்டிருந்தவன், அதை கட்டிலில் போட்டுவிட்டு, ஷூவை அணிந்து கொண்டான். அடுத்து பெல்ட் போன்ற ஒன்றை இடுப்பில் அணிந்து கொண்டவன், மலை ஏறுவதற்கு தேவையான, கை-கத்தி, கயிறு போன்ற சாதனங்களை எடுத்து பெல்டில் அதற்கென வடிவமைக்கப்பட்டிருந்த அமைப்பினுள் வைத்தான். மழை இறங்குவதற்கு உதவும் இரண்டு கைத்தடியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். பாதுகாப்பு வேலியிலிருந்த கேட்-டை திறந்து கொண்டு காட்டில் புகுந்தவன், மதுவால் எப்படி தன்னை மன்னிக்க முடிந்தது என்ற கேள்வி கொடுத்த விடையை அந்தக் நீலகிரி மலையின், கிழக்குச் சரிவில் இருந்த பள்ளத்தாக்கில் யாரும் அறியாமல் புதைக்க சென்றான்.
5 மணி நேரம் கழித்து
சோர்வுடன் இருந்தான் மணி. பொதுவாக மூன்றில் இருந்து மூன்றரை மணி நேரத்தில் இறங்கி விடுபவன், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டான். அந்த காட்டாற்றின் கரையில் அமர்ந்து, ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை வெறித்தவாறு அமர்ந்திருந்தான். அவன் கேள்விக்கான விடையை மலைச்சரிவில் எங்கோ தொலைத்துவிட்ட நிம்மதி அவன் முகத்தில். மழை இறங்கும்போது, வழுக்கி விழுந்ததன் அடையாளமாக உடலெங்கும் சேறும், சிராய்ப்புகளும் இருந்தது. எழுந்தவன், உடலில் இருந்த சேறை ஆற்று நீரில் கழுவினான்.
நேற்று இரவு பெய்த மழையின் தாக்கத்தால், ஆற்று நீரின் இழுப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஆற்றைக் கடக்க ஏதுவான இடம் தேடி, ஆற்றின் கரையோரம் நடக்க ஆரம்பித்தான். பாறைகள் அதிகமா இருந்த ஒரு இடத்தை கண்டதும், ஆற்றைக் கடக்க சரியாக இருக்கும் என்று மனதில் நினைத்தவன், ஆற்றில் இறங்கினான். ஐந்தாறு அடி கூட கடந்து இருக்க மாட்டான், ஆற்ருநீரின் இழுப்பு, அவன் நினைத்ததை காட்டிலும் அதிகமாக இருப்பதை உணர்ந்தவன், ஆற்றைக் கடப்பதற்கு பாதுகாப்பான இடம் இது இல்லை என்று உணர்ந்து கரையேற திரும்பினான். அவன் திரும்ப உடலை சூழற்றிய அடுத்த நொடி, ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டான். இரண்டு மூன்று பாறைகளில் மோதியவன், ஆற்று நீரால் புரட்டிப் போடப்பட்டு, பாறைகள் இல்லா இடத்தில், ஆற்று நீரின் விசை குறைய, சுதாரித்துக் கொண்டவன் நீந்த ஆரம்பித்தான். நீரின் இழுப்பில், பக்கவாட்டில் நீந்திக் கரையேறுவது பெரும் போராட்டமாக இருந்தது அவனுக்கு. அப்பொழுதுதான் அவன் கண்ணில் பட்டது அந்த திருப்பம்.
நூறு நுத்தம்பது அடி தொலைவில், ஆற்றின் போக்கு வலது பக்கமாகத் திரும்பிய இடத்தில், இடது புறத்தில் ஒரு சிறிய மண்மேடு. திருப்பத்தில் ஆற்றின் இழுப்பு அதிகமாக இருக்கும் என்று உணர்ந்தவன்,கரை ஏறுவதற்கு நல்லவாய்ப்பு என்று நினைத்துக்கொண்டு, முழு மூச்சில், ஆற்றின் இடதுபுறம் நோக்கி நீந்த ஆரம்பித்தான். இயற்கையும் அவனுக்கு உதவி செய்தது, அந்த மணல் மேடை ஒட்டி இருந்த பாறையின் வடிவில். பாறையைப் பற்றிக்கொண்டு சில விநாடி முயற்சியில், அதில் ஏறி அமர்ந்தான். ஏதோ பெரிதாக ஆசுவாசம் அடைந்தது, அவன் உடல், இதெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் சலனம் இல்லாமல் இருந்தது அவன் மனம். பாறைக்கும், அந்த மணல் மேட்டிற்கும் இடையில் இரண்டடிக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
சுவாசத்தை சீர் படுத்திக் கொண்டவன், கரையிறங்கிய பக்கமே, கரை ஏறினான். காலில் பாதி அளவுக்கு இருந்த சேற், திடீரென்று முழங்காலை தாண்டியது. சுதாரிக்கும் முன்பே, அடுத்த காலையும் புதைமணலில் எடுத்து வைத்திருந்தான். புதைமணல் சிக்கிவிட்டோம் என்பதை, அவன் உடல், மூளைக்கு உணர்த்தியதும், மூளை அவன் உடலை அவசரப்படுத்தியது. அதன் விளைவாக, சிறிது நேரத்திலேயே முழங்காள் அளவுக்கு இருந்த சேற், அவன் இடுப்பை தாண்டியது. உடலின் இயக்கத்தை நிறுத்தினான். கால்களில் தரை தட்டுப்படவில்லை. தனது முடிவு இதுதானோ என்ற எண்ணம் தோன்ற, சேற்றின் குழுமை அவன் உள்ளத்திலும் பரவியது. மதுவை, ஒருமுறை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஏக்கம், மனதில். மொபைலை எடுக்க இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்-டை தொட்டு தடவியவனுக்கு, மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அவன் உதடுகளில் ஒரு ஏளன சிரிப்பு, அது யாருக்கானது என்பது அவன் மட்டுமே அறிவான்.
************
அன்று காலை,
மூன்றாவது முயற்சியில் தான் அழைப்பை எடுத்தாள், நேத்ரா.
"இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு, அப்புறம் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்!!" அவள் பேசும் முன்னமே பேசினான் மணி.
"சொல்லு!!" அவளுக்கு பேச விருப்பம் இல்லை என்பது தெளிவாக புரிந்தது மணிக்கு.
"மது கல்யாண போட்டோ இருந்தா அனுப்பு!!" ஏன் அதைக்கேட்டான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
"அத வச்சு என்ன பண்ண போற?" நேத்ராவின் கேள்விக்கு, பதில் அளிக்கவில்லை, மணி.
"அனுப்பிட்டேன், பார்த்து சந்தோஷப்பட்டுக் கோ!!" என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
"டிங்" என்ற சத்தத்துடன் மெசேஜ் வந்தது. அதைதிறந்து பார்க்காமல் மனமில்லாமல், வெறித்துக் கொண்டிருந்தவன், அதை பார்க்காமலே மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு, மலை இறங்க ஆரம்பித்தான். ஆனால், இப்போது அதைப்பார்த்துவிட்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம், அவன் மனதில்.
************
கை விரல்களால் பற்றியவனுக்கு ஒரு எண்ணம். மீள்வதற்கான வழியை அவன் ஆராய்ந்தான். கரையில் இருந்த மரத்தின் விழுது ஓன்று, அவன் தலைக்கு மேலாக ஏழு எட்டு அடியில் தொங்கிக் கொண்டிருந்தது. உடலை அசைவை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்திக்கொண்டு, இடுப்பில் இருந்த பெல்ட்டை உருவினான். அதன் நீளம் குறைவாக இருந்தது. பெல்ட்டில் இருந்த கத்தியை வைத்து. அதை இரண்டாக கிழித்து, அதன் ஒரு முனையில் கத்தியை குறுக்காக வைத்து காட்டினான். கத்தி கட்டைபட்ட முனையை கிளையை நோக்கி எறிந்தான். நான்காவது முயற்சியில் கிளையில் சுற்றிக் கொண்டது. மெதுவாக அதை இழுத்துப் பார்த்தான், அவன் கணம் தாங்கும் என்று தோன்றியது.
முழங்கால் அளவு அந்த புதைமணலில் இருந்து வெளியேறியிருந்த நேரம், பெல்ட் அறுந்தது. மீண்டும் புதைமணலில் விழுந்தான். தப்பிக்க நினைததற்கு தண்டனையாக மார்புவரை அவனை தழுவிக்கொண்டது அந்த புதைமணல் சேற். சாகப்போகிறோம் என்ற கவலையெல்லாம் இல்லை அவனிடம், கண்களை மூடி, வாழ்வின் இறுதி சுவாசங்களை ரசித்து, மூச்சுவிட்டான். சேற் தோள்களைத் தாண்டி கழுத்தை தொட்ட போது, மீண்டும் அவனது உதடுகளில் ஒரு ஏளனசிரிப்பு. சாவு கூட தன்னை ஏமாற்றியது காரணமாக இருக்கலாம். அவன் காலில் கடினமான தரைதட்டுப்பட்டது. சுற்றிலும் கால்களை வைத்து தடவி பார்த்தான், கிட்டிய வரைக்கும் கடினமான தரையே, அவன்கால்களில் பட்டது.
பத்து நிமிட போராட்டத்துக்குப் பின், தரையில் குப்புறப் படுத்துக் கிடந்தான். இன்னும் காலின் பாதி, அந்தப் புதை மணலில் இருந்தது. எழுந்தவன் சேறொடு மலை ஏற ஆரம்பித்தான்.
அன்று இரவு,
வழக்கமாக அமரும் பாறையில் அமர்ந்து, எதிரே தெரிந்த, இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தான், மணி. மலையேறியவன் குளித்து முடித்து, உடை மாற்றியிருந்தான். கையில் இருந்த, மொபைலை எடுத்து, நேத்ரா அனுப்பிய, மதுவின் திருமண புகைப்படத்தை பார்த்தான். அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் மது. இளம் சிவப்பு வண்ண, காக்ரா-சோளியில் தேவதை போல் இருந்தாள். அருகே, முகத்தில் தாடியும், தலையில் டர்பனுமாக, சிரித்துக் கொண்டிருந்தான் ஒருவன். ரஞ்சிதாக இருக்கும் என்று நினைத்தவன், தொடுதிரையை அனைத்துவைத்தான். மீண்டும் எதிரே, விரிந்துகிடந்த, இருள்சூழ்ந்த, பள்ளத்தாக்கை வெறித்தான்.
அவனது உதடுகளில் புன்னகை. வலியும், நிம்மதியும், சமஅளவில், நிரப்பிக்கொண்ட புன்னகை. இந்த மனம் என்னும் மாயக் கண்ணாடியின் பிரதிபலிப்புகள் எந்த விதிக்குள்ளும் அடங்காதவை, குற்ற உணர்ச்சியில், கோபத்தை எதிர்பார்த்த இடத்தில், மன்னிப்புடன், காதலும் கொடுக்கப்பட, காதலை ஏற்று மகிழ்ந்து சிரிப்பதை விடுத்து, மன்னிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அழுகின்றது.
மனம், யாராலும் தீர்க்க முடியாத, நேரில்லாத கணித சமன்பாடு.